அண்மையச்செய்திகள்

Tuesday 23 January 2018

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு
பேருந்து கட்டணத்தை 3600 கோடி வரை உயர்த்தி, நட்ட சுமையை மக்கள் மீது சுமத்தும் தமிழக அரசைக் கண்டித்து, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும்.
"""""""""""""”""""""""”""""”""""'""
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, நடுத்தர மக்கள், தங்களது போக்குவரத்து தேவைகளுக்கு பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை தாங்க முடியா சுமைக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத செயலைக் கண்டித்து, கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடெங்கும் பலதரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் முழுதும் மாணவர்களின் போராட்டமும் வலுவடைந்து வருகிறது.
இப்படி, முன்னேற்பாடுகள் ஏதுமில்லாமல் 3600 கோடி ரூபாய் அளவிற்குப் பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தி மக்களை வதைப்பதுதான் மக்களுக்கான அரசா என்ற கேள்விகளை மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
திமுக ஆட்சியின் போது பேருந்து கட்டணமோ, மிசாரக் கட்டணமோ உயர்த்தப்படவே இல்லை, அம்மையார் உயிரோடு இருந்த போதும், அவருக்கு பின்னால் முதல்வரான ஓ.பி.எஸ், இ.பி.எஸ் களின் ஆட்சியில்தான் இத்தனை கொடுமைகள் அரங்கேற்றப் படுகின்றது என்றும், மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வருவதாகக்கூறி, இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு, போக்குவரத்துத்துறை நட்டமில்லாமல் இயங்க உரிய நிர்வாக மேம்பாடுகளை மேற்கொள்ளாமல், கட்டணத்தை உயர்த்தி நட்ட சுமையை பொதுமக்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து எலிகளும், கரப்பான் பூச்சிகளும் குடியேறி, மழை நீரும் பேருந்துக்குள் கொட்டும் அளவிற்கு ஓட்டையும், உடைசலுமாக உரிய பராமரிப்பின்றி தகுதியற்றுப்போன பேருந்துகளை சரி செய்து, மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து கட்டண உயர்வை மட்டும் அறிவித்திருப்பது வெக்கக் கேடானது, விரோதமானது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் 27.1.2018 சனிக்கிழமை அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு,
மக்கள் நலனில் அக்கறை கொண்ட மதிப்புக்குரிய செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்வதோடு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பேரவைத் தோழர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று பேரவைத் தோழர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேரவைத் தோழர்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களை நேரில் அணுகி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் செய்தியை உடனடியாக உறுதி படுத்திட வேண்டும் என்று, மாவட்ட செயலாளர்களும், தலைமை நிர்வாகிகளும் அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
தலைமையகம். கோவை
23.1.2018

Monday 15 January 2018

தோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்


தோழர் ஞானி மறைவு --
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்
"''""""""""""""""""""""""""""""""""
எனது நெடுங்கால நண்பரும் அரசியல் தோழருமான தோழர் ஞானி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். தோழரின் இழப்பு உழைக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு பேரிழப்பாகும். தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடதுசாரி சிந்தனையாளரும், வரலாற்று ஆய்வாளருமான தோழர் ஞானி அவர்களின் சிந்தனையும் எழுத்தும் பண்முகத்தன்மை கொண்டது, குறிப்பாக "மலக்குழியில் மனிதனை இறக்காதே" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுதும் ஆதித்தமிழர் பேரவை முன்னெடுத்த தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டத்தை அங்கீகரித்து, மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலத்தை தனது எழுத்தின் மூலம் பொதுப்புத்தி சமூகத்திடம் கேள்வியை எழுப்பியவர்,

மறைக்கப்பட்ட மாமன்னர் ஒண்டிவீரன் வரலாற்றை "ஒப்பில்லா மன்னன்" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட ஒண்டிவீரன் வரலாற்றை நாடறிய செய்தவர். இப்படி ஒடுக்கபட்ட சமூகத்திலும் ஒடுக்கபட்ட சமூகமான அருந்ததியர் சமூக மக்களின் வலியையும், வரலாற்று தகவல்களையும், தனது எழுத்தின் மூலம் துணிச்சலோடு பதிவிட்ட தோழர் ஞானியை யாரும் மறந்திருக்க முடியாது.

இடதுசாரி சிந்தனையிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கரையிலும் உள்ள ஒரு சில எழுத்தாளர்களின் வரிசையில் தோழர் ஞானி அவர்களுக்கும் நிரந்தர இடம் உண்டு, என்பது மறுக்க முடியாத உண்மை. தோழரின் இழப்பு உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பு.

தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை செலுத்துதோடு, அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
கோவை.
15.1.2018.
 
 

Tuesday 2 January 2018

ஆதித்தமிழர் பேரவை பொதுக்குழு கூட்டம் 31-12-2017 நடைபெற்றது - இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது



31.12.2017 அன்று திருச்செங்கோட்டில் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

ஆதித்தமிழர் பேரவை
மாநில பொதுக்குழு கூட்டம்.
""""""""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் "மாநில பொதுக்குழு" கூட்டம் பேரவை நிறுவநர் 'அய்யா' அதியமான் தலைமையில் 31.12.2017 திருச்செங்கோடு நாடார் மகாலில் பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய, மாநகர, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
""""""'''''''''''''''"
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
""""""""""""""""
தீர்மானம்.1
வீரவணக்க தீர்மானம்:-
""""""""""""""""
அருந்தததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட தோழர்கள் நீலவேந்தன், இராணி, மகேசுவரன், மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் வளர்ச்சிக்கு உழைத்த தோழர்களுக்கும் இக்கூட்டம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

தீர்மானம்.2
துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு தீர்மானம்:-
""""""""""""""""
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணிபுரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி நச்சுவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டிய மத்திய மாநில அரசுகள் கண்டும் காணாமலே இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி 1993 முதல் விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்களை கணக்கில் எடுத்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், இதுவரை நச்சு வாயு தாக்கி இறந்தவர்களின் புள்ளி விபரங்களை அரசே கணக்கெடுக்க வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துவதோடு,

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் கையால் மலமல்லும் தொழிலாளர்கள் என அரசு அறிவித்திட வேண்டும். மேலும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்.2
அரசியல் அதிகாரப் பகிர்வு தீர்மானம்.
""""'"""'""'""""""""""""""""""'
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட அதாவது பட்டியலின மக்களில் மூன்றில் ஒரு பங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததால், கலைஞர் ஆட்சியில் 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கல்வியிலும், வேலையிலும் ஓரளவிற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

ஆனால் அரசியல் அதிகாரப் பங்கீட்டில் இதுவரை அருந்ததியர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள 45 தனி சட்டப்பேரவை தொகுகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்படோருக்கும், 1 தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தொகுதி மறுசீரமைப்பின் போது பெரும்பான்மையான தொகுதிகள் வட மற்றும் தென் மாவட்டங்களுக்குமே சென்றுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும் பெரும்பான்மையான தனித் தொகுதிகளை பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும் மட்டுமே அனைத்து கட்சிகளும் ஒதுக்கி வருகிறது, இது சமூகநீதிக்கு எதிரானது என்று தெரிந்தும் ஒவ்வொரு கட்சிகளும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளது.

நியாயப்படி அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய மூன்றில் ஒரு பங்கான 15 தொகுதிகளையும் சேர்த்தே பறையர்களும், பள்ளர்களும் அனுபவித்து வருகின்றனர். இது அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்,

எனவே வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், ஒவ்வொரு கட்சியும் அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய 15 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்கிதர வேண்டும் என்று இந்த பொதுக்குழு அனைத்து கட்சிகளையும் வலியுறுத்துகிறது.

குறிப்பாக சமூக நீதியை போற்றி வளர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இதில் முக்கிய கவனம் செலுத்தி, வர இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளை அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கவேண்டும், இதே போன்று ஆறு தனி நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை அனைத்து கட்சிகளும் அருந்ததியருக்கு ஒதுக்கி தரவேண்டும், என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட இரண்டு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்தி இந்த ஆண்டு முழுவதும்! இழிவொழுப்பு, அதிகார மீட்பு ஆண்டாக ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் அமையும்.
__________________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
31.12.2017.