அண்மையச்செய்திகள்

Monday, 15 January 2018

தோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்


தோழர் ஞானி மறைவு --
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்
"''""""""""""""""""""""""""""""""""
எனது நெடுங்கால நண்பரும் அரசியல் தோழருமான தோழர் ஞானி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். தோழரின் இழப்பு உழைக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு பேரிழப்பாகும். தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடதுசாரி சிந்தனையாளரும், வரலாற்று ஆய்வாளருமான தோழர் ஞானி அவர்களின் சிந்தனையும் எழுத்தும் பண்முகத்தன்மை கொண்டது, குறிப்பாக "மலக்குழியில் மனிதனை இறக்காதே" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுதும் ஆதித்தமிழர் பேரவை முன்னெடுத்த தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டத்தை அங்கீகரித்து, மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலத்தை தனது எழுத்தின் மூலம் பொதுப்புத்தி சமூகத்திடம் கேள்வியை எழுப்பியவர்,

மறைக்கப்பட்ட மாமன்னர் ஒண்டிவீரன் வரலாற்றை "ஒப்பில்லா மன்னன்" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட ஒண்டிவீரன் வரலாற்றை நாடறிய செய்தவர். இப்படி ஒடுக்கபட்ட சமூகத்திலும் ஒடுக்கபட்ட சமூகமான அருந்ததியர் சமூக மக்களின் வலியையும், வரலாற்று தகவல்களையும், தனது எழுத்தின் மூலம் துணிச்சலோடு பதிவிட்ட தோழர் ஞானியை யாரும் மறந்திருக்க முடியாது.

இடதுசாரி சிந்தனையிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கரையிலும் உள்ள ஒரு சில எழுத்தாளர்களின் வரிசையில் தோழர் ஞானி அவர்களுக்கும் நிரந்தர இடம் உண்டு, என்பது மறுக்க முடியாத உண்மை. தோழரின் இழப்பு உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பு.

தோழருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை செலுத்துதோடு, அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.
கோவை.
15.1.2018.
 
 

No comments:

Post a comment