அண்மையச்செய்திகள்

Tuesday 27 October 2015

மாநிலக் கல்லூரி மாணவர்களின் மீதான தமிழக காவல்துறையின் தடியடித்தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. நிறுவனர் அதியமான் அறிக்கை.

மாநிலக் கல்லூரி மாணவர்களின் மீதான தமிழக காவல்துறையின் தடியடித்தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
நிறுவனர் அதியமான் அறிக்கை.)ocober 14-2015
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தமிழக காவல்துறை காட்டுத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ஜனநாயக விரோதப்போக்கை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடியபோது மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து குடிகாரர்கள் கும்மாளம் போடுவதற்கு துணையாக நின்று தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது போல்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் சரணடைய வந்தபோது கொலைகாரனுக்கு ஆதரவாக கூடிய சாதிவெறியர்களை கலைந்து போக வற்புறுத்தாமலும், அப்படி சட்டத்திற்கு புறம்பாக கூடிய சாதிவெறிக் கும்பலை கலைப்பதற்கு தனது தடியை தூக்காமலும் இருக்கும் தமிழக காவல்துறை யாருக்கு கைத்தடியாக செயல்படுகிறது.
அதிமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளும் நாளும் பெருகியே வருகின்றது. அதற்கு தீர்வு காண துப்பில்லாமலும், கவுரவம் என்ற பெயரில் காதல் மணம்புரியும் தலித் இளைஞர்களை காட்டுத்தனமாக கழுத்தை அறுத்து, நஞ்சு கொடுத்து படுகொலை செய்கின்ற சம்பவங்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை கொலை வெறியாட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத தமிழக அரசு.
சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வன்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டும் கானாமலும் இருப்பது, ஒடுக்கப்பட்ட உழைக்கின்ற மக்களுக்கு எதிரான அரசாகவே இந்த அரசு செயல்படுகின்றது என்பதைத்தான் மேலும் மேலும் இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றது.
இப்படி மாணவர்கள் மீது, மாற்றுத்திறனாளிகள் மீது, போராடும் மக்கள் மீது பொய் வழக்குகளை புனைந்து அடக்குமுறை சட்டங்களை ஏவிவிடுவது, எதிர்கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது அவதூறு வழக்குகளை தொடுத்து அச்சுறுத்துவது என அதிகாரப் போக்கையே கடைபிடிடித்து வரும் இந்த அரசின் செயல்கள் வாக்களித்த மக்களுக்கு செய்யும் வஞ்சகமே அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.
இந்த நிலை இனியும் நீடித்தால் மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை எத்தகைய அடக்குமுறையையும் கொண்டு தடுத்துவிடமுடியாது, தமிழக அரசிற்கு தக்கபாடம் புகட்டுவார்கள்.
மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையை சார்ந்தவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது கிமினல் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.
ஒடுக்கப்பட்டோர்
விடுதலைப்பணியில்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment