அண்மையச்செய்திகள்

Tuesday 27 October 2015

தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறியிருப்பது மதசார்பின்மைக்கும் எதிரானது ஆதித்தமிழர் பேரவை கண்டனம்.

தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறியிருப்பது மதசார்பின்மைக்கும் எதிரானது ஆதித்தமிழர் பேரவை கண்டனம். October 15 - 2015

உத்திரபிரதேச மாநிலம், கவுதம புத்தா நகர் மாவட்டம் தாத்ரி அருகேயுள்ள பிசடா என்னும் கிராமத்தில் மாட்டுக்கறியை உண்டதற்காக இக்லாக் என்பவரை ஈவு இறக்கமின்றி இந்துமத வெறியர்கள் அடித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த கோரச் சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக கண்டித்துவரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள், இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாக கண்டித்து அத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசிற்கு உத்தரவிடுவதற்கு பதிலாக,
இந்துமத வெறியர்களை மீண்டும் உசுப்பேத்திவிடுகின்ற விதமாக இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என மென்மையான அணுகுமுறையை கடைபிடித்திருக்கின்றார். இவரது இந்த அணுகுமுறை என்பது இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களுக்கும் பொதுவானவர் பிரதமர் என்ற நிலையை மறந்து ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பதையே காட்டுகின்றது. மேலும் இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சீடனாக இருந்து அவர்களது ஆலோசனையின் பேரிலேயே தனது அரசை முன்னெடுத்து செல்லுகின்றார் என்பது, வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றது.

இந்நிலையில் சிவசேனா கட்சி மோடியின் இந்த மென்மையான அணுகுமுறையைக் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இரண்டே நாளில் இரண்டாயிரம் இசுலாமியர்களை குஜராத்தில் கொன்றழித்த நரேந்திரமோடி இப்படி கண்டித்திருப்பது வேடிக்கையியிலும் வேடிக்கையானது என விமர்சனம் செய்துள்ளது.
மாட்டுக்கறி உண்பதை கடுமையாக எதிர்க்கும் சங்பரிவாரங்களாகிய இவர்களின் கொள்கை நோக்கம் பசுவை காப்பற்றும் ஜீவகாருண்ய நோக்கமல்ல இசுலாமியர்களை குறிவைத்து ஒடுக்குவதற்கு "பசுவதை" எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து நியாயப்படுத்த முற்படுகின்றர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சமீபத்தில்தான் பாரதிய ஜனதா கட்சியின் எம் எல் ஏ ஒருவர் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் ஆலை ஒன்றை நடத்தியதற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாட்டுக்கறியில் 30 விழுக்காடு இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதியாகின்றன. இதை ஏற்றுமதி செய்யும் மூன்று பெரும் ஏற்றுமதியாளர்கள் பி ஜே பி யின் பின்னணியில்தான் தங்களது ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த மூவரில் ஒருவர் கூட இசுலாமியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுக்கறியை உண்பவர்களை எதிர்கின்றோம் என்ற பெயரில் இசுலாமியர் எதிர்ப்பு என்ற அபாயகரமான அரசியலை முன்னெடுக்கும் பார்பனிய இந்துத்துவ சக்திகளை வேரடி மண்ணோடு வெட்டி எறிந்து நாட்டை சுடுகாடாக மாற்ற திட்டமிடும் இவர்களுக்கு எதிராக நாம் அனைவரும் கரம்கோர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
எந்த கட்சியோடு கூட்டணி வைத்தால் எத்தனை சீட்டு கிடைக்கும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கூட்டு சேராமல் மதநல்லிணக்கம், மதசார்பின்மை, மத எதிர்ப்பு, சாதிஎதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு மற்றும் சமூகநீதி பாதுகாப்பு என்ற அரசியல் புரிதலும் குறிக்கோளும் உள்ள அணியில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்.
அதன்மூலம் இந்த மதவாத சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
மதவெறி சாதிவெறியை முறியடிப்போம்!
மனிதநேயத்தை வளர்த்தெடுப்போம்!!
தோழமையுடன்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment