அண்மையச்செய்திகள்

Sunday, 27 November 2016

யாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை.? ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான "ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.


யாரைக் காவுகொடுக்க கருப்புப்பண கள்ளநோட்டு ஒழிப்பு போலி நடவடிக்கை.? ---- ஆதித்தமிழர் பேரவையின் வெளியீடான "ஆதித்தமிழன் அறிவாயுதம்* இதழின் தலையங்கம்.

மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தாம் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட வாங்குவதற்கு ஒரு நாட்டின் குடிமக்கள் கால்கடுக்க நாள் முழுதும் வங்கிகளுக்கு எதிரே வரிசையில் காத்திருக்கிற கொடுமை உலகில் எந்த கொடுங்கோல் ஆட்சிகளிலும் நடந்தததாக பதிவுகளில்லை.

வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருந்த மக்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 யும் தாண்டும் என்ற புள்ளி விபரம் வேதனையளிக்கிறது, அப்படி இறந்தோரில் ஒருவர்கூட பணக்காரர் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது இதிலிருந்தே தெரிகிறது இது கறுப்புப் பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்பது.

முன் யோசனையற்ற இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம்! என உச்சநீதிமன்றமே தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியா பெறும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கப்போகிறது, என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது. பகவத் கீதையை தேசிய நூலாக மாற்றுவதற்கான முயற்சிகள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் உயிர்களை ஈவு இரக்கமற்ற முறையில் காவு கொண்டது. புதியக்கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வி முறையை நடைமுறை படுத்தத் துடிப்பது, பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை மேற்கொள்வது, என ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களுக்கு எதிராக நெருக்கடிகள் பலவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் மதவெறி பாசிச செயல்பாடுகளோடு, இந்த நெருக்கடியும் வெகு மக்களின் கழுத்தை நெறிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

மோடி அரசு பதவியேற்ற நாள் முதல் இன்று வரை வேலையற்றோருக்கு புதிய வேலை வாய்ப்புகளை போதிய அளவுக்கு உருவாக்கித்தரவில்லை, நாட்டை முன்னேற்றுவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, வெற்றுக் கூச்சலும், உணர்ச்சியை தூண்டும் உரை வீச்சும், நாட்டுக்கு நாடு சுற்றிவரும் ஊதாரித்தனம் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் சூழலில் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலைதான் உருவாகியுள்ளது,

விவசாயத் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் குறைந்த பட்ச தற்சார்பு பொருளாதாரமும் அழிக்கப்பட்டு, பார்பனிய தரகு முதலாளிகள் மூலம் அன்னிய நாட்டு மூலதனங்களை இறக்குமதி செய்து கார்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி அன்னிய நாட்டிடம் கையேந்துகின்ற சூழலே ஏற்படும்.

வராக்கடன் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, தூய்மைப் பணியாளர்கள் பட்ட கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களையும், சிறு குறு தொழில் புரியோர் பெற்ற கடன்களையும் வாராக் கடன் பட்டியலில் வைத்து தள்ளுபடி செய்ய முன்வருமா?

ஆக மோடியின் இந்த அறிவிப்பு கருப்புப்பண பேர்வழிகளை அழிப்பதல்ல, அன்றாடம் காய்ச்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களின் சுருக்குப் பையில் இருக்கும் காசைப் பிடுங்கி கருப்புப் பண முதலைகளிடம் கடனாக ஒப்படைக்கும் செயலன்றி வேறொன்றுமில்லை.

ஆக இப்போதாவது விழிதெழவேண்டும், மோடிக்கு ஆதரவாக அண்டப்புளுகளை அள்ளி வீசும் ஊடக பொய்யுரைகளுக்கு ஆட்படாமல் மக்கள் விரோத பார்பனிய பயங்கரவாத பாசிச மோடி அரசை அப்புறப்படுத்த ஜனநாயக சக்திகளும் வெகுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே, இப்போதைக்கு நாட்டை பேரழிவிலிருந்து மீட்பதற்கான வழிமுறையாகும்.

No comments:

Post a comment