அண்மையச்செய்திகள்

Saturday, 12 December 2015

மழை வெள்ளம் சூழ்ந்தது மதமும், சாதியும் மடிந்தது! மழை வெள்ளம் வடிந்தது மீண்டும் மனிதனை சாதி சூழ்ந்தது! --- க.சு ஆனந்தன் - ஆதித்தமிழர் பேரவை

மழை வெள்ளம் சூழ்ந்தது
மதமும், சாதியும் மடிந்தது!
மழை வெள்ளம் வடிந்தது  மீண்டும்
மனிதனை சாதி சூழ்ந்தது!
•••••••••••••••••••••••••••••••••••••
கடந்த ஒரு வார காலமாக சென்னையையும் அதன் சுற்று வட்ட மாவட்டங்களிலிலும் கொட்டித்தீர்த்த கனமழையின் பாதிப்புகளால் ஏழை பணக்காரன் என்ற வர்க வேறுபாடும், இந்து-இஸ்லாம்-கிருத்துவம் என்ற மத மாச்சரியமும், கீழ்சாதி, மேல்சாதி என்ற சாதி பேதமும் அற்றுப்போய் அனைவரும் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி நடுத்தெருவில் நிறுத்தியது மழை வெள்ளம்.

மழை வெள்ளத்தை அகற்றமுடியாமல் முழிபிதுங்கி நின்றது மாநிலஅரசு, மாநாகராட்சி உயர் அதிகாரிகள் தங்களையே தற்காத்துக்கொள்ள முடியாமல் ஒடி ஒழிந்தனர்.

ஆனால் கடைநிலை ஊழியர்கள் மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை அடைப்புகளை உபகரணங்கள் ஏதுமின்றி நீக்கினர்.

பாதாள சாக்கடை பள்ளம் இருக்கும் இடங்களில் குச்சிகளை நட்டுவைத்து  அடையாளம் காட்டியும், பள்ளத்தின் அருகிகே சென்றவர்களை விலகிச் செல்லும் எச்சரிக்கை விடுத்தும் உண்ணாமல் உறங்காமல் உஷார் படுத்தினர்.

இப்போது மழை வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் மழை வெள்ளத்தால் எற்பட்ட குப்பைகள், மலைக் குன்றுகளாக மாறி நோய் பரப்பும் எமனாக மாறியுள்ளது. இது வெள்ளத்தால் எற்பட்ட பாதிப்புகளைவிட பலமடங்கு அதிகம்.

மழை வெள்ளத்திலிருந்து மக்களை காக்க உதவிய கரங்கள், குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்தும் போது மட்டும் சுழுக்கி கொண்டது போல, அது தங்களுக்கான பணி அல்ல என்று ஒதுங்கிக்கொள்கிறது.

வீட்டிக்குள் இருக்கும் போது சொந்த சாதி அடையாளத்தோடு இருந்து கொண்டு, வெளியில் வரும்போது பொதுவானவனாக காட்டிக்கொள்ள முற்படுகிறவன் போல்.

பாதிக்கப்பட்டு வீதியில் நின்றபோது சாதி,மத உணர்வுகளை துறந்த மக்கள், தங்களது உடமைகள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு மீண்டும் திரும்பிய பிறகு குவிந்த குப்பைகளை அகற்றுவதற்கு மனமில்லாமல், தனக்கும் அதற்கும் சம்பந்தமே!
இல்லை அதற்கென்று ஒரு சாதி இருக்கிறது என்று ஒதுங்கிக்கொண்டு துப்புரவு தொழில் செய்யும் சாதியை எதிர்பார்த்து, மீண்டும் தங்களின் சாதி அடையாளத்துக்குள் ஒழிந்து கொள்வதுதான் பொதுசமூக சாதிப்புத்தி.

அணுக் கழிவுகளை அகற்ற துணிவோடு களமிறங்கும் ராணுவம் கூட, மனிதக கழிவுகளையும், மழை வெள்ளத்தால் பெருகிய கழிவுகளையும் அகற்ற மறுக்கும் மனநிலை.

சட்டப்படி நடப்பேன் என உறுதியேற்கும் ஆட்சியாளர்கள் மனுதர்ம அடிபடையில் சாதிய சனதானத்தையே நடை முறைபடுத்துகின்ற அவலம் நீடிக்கின்றது நிலைகொண்டிருக்கிறது.  

விரைந்து குப்பைகளை அகற்றவும் நகரை சுத்தம்செய்யவும் பற்றாக்குறையாக ஆட்கள் உள்ளதால்! தமிழகம் முமுவதுமிருந்து ஆட்களை வரவழைப்பது, சரியான நடவடிக்கையே என்கின்ற பொதுசமூக புத்தி (பொதுசமூக புத்தி என்பது எப்போதும்! சாதி புத்தியே!)

நகரத்தின் பெரும் பகுதி மிந்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கிக்கிடந்தும், மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டும், மிந்தடையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் இருந்து மின்சார ஊழியர்கள் யாரையும் அழைக்காத அரசு!

மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் இருந்து குடிநீர் வாரிய ஊழியர்களை அழைக்காத தமிழகஅரசு!

ஒருவார காலமாக சுகாதாரமற்ற நிலையில் உள்ள குழந்தைகளையும், முதியோர்களையும், கர்பிணி தாய்மார்களையும் காப்பாற்ற தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவர்களை அழைக்காத தமிழகஅரசு!  

குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் சக்கடை கழிவுகளை சுத்தம் செய்வும், பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யவும் மட்டும் தமிழகம் முழுவதும் இருந்து 4,000 துப்புரவு தொழிலாளர்களை அழைப்பது ஏன்?

மற்ற வேலைகளெல்லாம் எல்லோரும் செய்ய முன்வருவார்கள் ஆனால்! துப்புரவு பணியை மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதிதான் செய்யவேண்டும் என்ற சாதிய எண்ணத்தை தவிர என்னவாக இருக்கமுடியும்.

அப்படி தமிழகம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கையுரையை மட்டும் கொடுத்துவிட்டு மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாயை ஊக்க தொகை தருவதாக சொல்லி, மாநகராட்சி லாரிகளில் சென்னையை நோக்கி நிற்க வைத்தே! "பலி" ஆடுகளைப்போல இழுத்து வரப்பட்டிருக்கின்றார்கள்.

மேற்கு (கோவை.திருப்பூர். சேலம்.ஈரோடு.திருச்சி.நாமக்கல்) மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களாக மாறி மனைப்பட்டா கேட்கவந்தவனையும், பத்தாம்வகுப்பு படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருந்த சக்கிலிய இளைஞர்களை வரவழைத்து,

சென்னையில் வேலை தருவதாக ஆசைவார்த்தை காட்டி, நாள் ஒன்றுக்கு முன்னூறும், திரும்பி வந்தவுடன் மாநகராட்சியில் நிரந்தரவேலையும் என்று ஏமாற்றி அம்மாவின் ஆணைக்கிணங்க ஆட்களை அனுப்பிக்கொண்டுள்ளனர்.

சாதிதான் சமூகம் என்றால்!
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!!
என்றார்..
புரட்சியாளர் அம்பேத்கார்.

சுனாமியும், சூறாவளியும் சுற்றிவளைக்கட்டும்!
அப்படி சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றில் விஷம் பரவட்டும்!
_____________
என்றும் அய்யாவின் வழியில் ச.சு.ஆனந்தன்
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment