அண்மையச்செய்திகள்

Friday, 11 December 2015

மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னையை மீட்க தங்களின் உடல் நிலையையும் உயிரையும் சிறிதும் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்!! - ஆதித்தமிழர் பேரவை

மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னையை மீட்க தங்களின் உடல் நிலையையும் உயிரையும் சிறிதும் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்!!
******************
கடந்த 8.11.2015 முதல் தமிழகத்தில் தொடங்கிய கனமழை மூன்று கட்டங்களாக சென்னை, கடலூர் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்ததின் விளைவாக, தமிழகமே நிலைகுலைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உயிர்கள் சிலவற்றையும், உடைமைகள் பலவற்றையும் இழந்து செய்வதறியாது திக்கற்று நிற்கிறது. மக்களின் துயரத்தை துடைக்க அண்டை மாநிலங்கள், நடுவண் அரசு மட்டுமல்லாது ஏனைய உலகநாடுகளும் உதவிக்கரம் கொடுக்குமளவுக்கு ஒரு வரலாறு காணாத சேதம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.


கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கி நிர்மூலமாகிப் போயிருப்பதும், யாரும் மீட்புப் பணியில் ஈடுபட வெளியே வராதமுடியாத அந்த முதல் மழைநாள் துவங்கியே, சாதி மத பேதமில்லாமல்  பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியும், இன்றளவும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்த்தும், தங்களுடைய அனைத்து பள்ளி வாசல்களையும் மக்கள் தங்குவதற்காக அனுமதித்தும், உண்மையிலேயே மிகச்சிறப்பான பணியாற்றிய அனைத்து இசுலாமிய சகோதரர்களையும் எப்படிப் பாராட்டுவது என்று புரியவில்லை. குறிப்பாக இசுலாமியப்  பங்கும் இதில்  முக்கியப் பாராட்டுக்குறியது. அதேபோல மழை கோரமாக ஆட்டுவித்த துவக்கத்திலேயே களத்தில் நின்று பல மக்களை மீட்ட மீனவச் சகோதரர்களும் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்கள் ஆகிறார்கள். இவர்களைத் தவிர தொண்டு நிறுவனங்கள் ஆற்றிய நிவாரணப்பணிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரைத்  துடைக்க பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது.


தற்போது கனமழை சற்று குறைந்து, தேங்கி நிற்கும் மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றநிலையில், சென்னை மாநகரமே குப்பைமேடாகி சாக்கடைகள் பெருகி, கழிவடைப்புகள் ஏற்பட்டு விஷநோய் பரவும் அபாயத்தில், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பமுடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்,
சாக்கடை கழிவடைப்புகளை அகற்றவும், மலையென குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றவும் சென்னையை சேர்ந்த
20,000 தூய்மை தொழிலாளர்களையும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நகராட்சி தூய்மை தொழிலாளர்களையும், வடநாட்டிலிருந்து வரவைக்கப்பட்ட  தூய்மை தொழிலாளர்களையும் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் இறக்கியிருக்கிறது தமிழக அரசு.


தமிழ்நாட்டில் தூய்மை தொழிலாளர்களின் நிலை என்ன?  தூய்மை தொழிலாளர்கள் என்றாலே அது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால்தானோ என்னவோ அவர்கள் அப்பணியை செய்வதற்கான எந்த ஒரு சரியான  உபகரணங்களோ, அவர்கள் தங்களை நோய்  நொடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தேவைப்படும் சரியான உடற் கவசங்களையோகூட அரசு சரியாக வழங்குவதில்லை. இன்றளவும் மலக்குழியிலும், சாக்கடைக் குழியிலும் அடைப்பை நீக்க இறங்குவது அருந்ததியர்களே. அருந்ததியர்கள் மட்டுமல்ல வேற யாருமே இப்பணியில் இருக்கக் கூடாது என்பதும் முழுவதும் இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்தியா முழுவதும் இருக்கும் தலித் அமைப்புகளின் கோரிக்கையாக இன்றளவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இப்படி சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இறங்குவதில் அன்றாடும் பலரும் உயிரிழக்கிறார்கள். எதேச்சையாக ஆபத்து வந்தோ, அல்லது இயற்கை சீற்றங்களினாலோ உயிரிழப்பது என்பது வேறு, இதில் இறங்கினால் 90 சதவிகிதம் சாவுதான் என்று தெரிந்தே, தன் உயிரையும் பணயம் வைத்து, அந்த முடை நாற்றத்தில் இறங்கி சரி செய்து பல சமயங்களில் இறந்து வெளிவருவது என்பது வேறு. இப்படி பலரும் தங்களின் இன்னுயிரை மாய்த்துத்தான் இன்றளவும் நாம் ஒரு சுக வாழ்வை வாழ வழிவகுக்கிறார்கள். இந்த மழை வெள்ள பேரிடரின் போது மட்டுமல்ல, அன்றாடும் இப்படியான தூய்மை பணிகளைச் செய்து நாம் எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் வாழ்வதற்கான புறச் சூழ்நிலையை அமைத்துத் தருகிறார்கள்.


இப்படியான தூய்மை பணியில் ஈடுபடுபவர்களின் நலன் குறித்தோ அவர்களின் வாழ்க்கை குறித்தோ என்றாவது நாம் நினைக்கிறோமா? அக்கறை கொள்கிறோமா? ஆனால் இப்போதும் இந்த பேரிடர் சூழ்நிலையில், அனைத்து தொலைகாட்சிகளிலும் அனைவரும் குறையாகக் கூறுவது "எங்கள் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும், தண்ணீரை நீக்க வேண்டும், நாறுகிறது, நோய் பரவுகிறது" என்று ஆத்திரம் பொங்க குறை கூறுவதைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. தற்காலிகமாகக்கூட, அவரவர் பகுதிகளைக்கூட, அந்தந்த பகுதி மக்களே சுத்தம் செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பது மிகுந்த வறுத்தமளிப்பதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தொண்டு நிறுவனங்களும் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகமே.


இதில் விதிவிலக்காக தவ்ஹித் சமாத் அமைப்பினர் தங்களது தொண்டர்கள் இரண்டாயிரம் பேருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருவகிறார்கள் என்ற செய்தி உண்மையிலேயே அத்தோழர்கள் சரியான புரிதலுடனும் உண்மையான சேவை மனமுடனும் இருப்பதை காட்டுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான பிணங்களையும் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களாகவே அடக்கமும் செய்திருக்கிறார்கள். தன் தேவைக்காகக்கூட தான் வாழும் பகுதியை தற்காலிகமாகக் கூட சுத்தம் செய்யமாட்டேன், ஒரு தூய்மைப் பணியாளர்தான் வந்து சுத்தம் செய்துதரவேண்டும் என்று நினைக்கும் மக்களின் மனோபாவம் எங்கே, தனக்கு தேவை இல்லாத போதும், அது தன்னுடைய வேலை இல்லாத போதும், ஊரையே  தூய்மை செய்யக் கிளம்பியிருக்கும் இசுலாமியத் தோழர்களின் சிறப்பு எங்கே? "கிளீன் இந்தியா", "சுவச் பாரத்" என்ற மோடியின் திட்டத்தை சார்ந்தவர்களும், அதற்கு பெரிய ஆதரவு அளித்த நடிகர்களின் ரசிகர் மன்றகளும் கூட இப்போது எங்கே போனார்கள் என்பது எவருக்கும் தெரிவில்லை.


மக்களும், கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும், முற்போக்காளர்களுமே கூட சுத்தத்தை பற்றி மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர, அதை செய்யும் தூய்மை தொழிலாளர்களைப் பற்றி என்றுமே பேசுவதில்லை. இத் தொழிலாளர்களுக்கு கையுறை காலுறை முகமூடி போன்றவற்றைக் கூட முழுமையாக வழங்காமல் வெறும் இரண்டாயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாக கொடுத்து விட்டு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு, இப்படி இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் வேறு யாராவது தூய்மை பணி செய்ய முன்வருவார்களா என்பதுதான் நமது கேள்வி. இந்தப் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தவர்களை காயப்படுத்துவது நமது நோக்கமல்ல. ஆண்டாண்டு காலமாக சாதிய சகதியில் மூழ்கி மீளமுடியாமல் காயப்பட்டு கிடக்கும் தூய்மைத் தொழிலாளர்களான அருந்ததியர்களின் இந்த அவலத்தைப்பற்றி கொஞ்சமாவது யோசித்து பார்க்க வேண்டும் என்பதே எமது குமுறல்.


2004 திசம்பர் 26-ல் ஏற்பட்ட "சுனாமி" என்ற ஆழிப்பேரலை சீற்றத்தின்போது உயிரிழந்தோரின் உடல்களை அகற்ற இந்திய இராணுவத்தினர் கூட மறுத்துவிட்டபொழுது, தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த தூய்மைத் தொழிலாளர்கள் தான் எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் அத்துணை பிணங்களையும் அகற்றி தூய்மைப் பணியாற்றினார்கள். இதே வழிமுறையைத்தான் இப்போதும் அரசு பின்பற்றியிருக்கிறது. இப்போதும் "சிங்காரச் சென்னையை" நமக்கு மீட்டுத் தரப்போவது இவர்கள்தான். எனவே குவிந்திருக்கும் குப்பையிலிருந்து மக்கள் மீண்டுவரும்பொழுது, மனக் குப்பையிலிருந்தும் மீண்டு வரவேண்டும், அனைவரின் மீதும், அனைத்து சமூகவிடயங்களின் மீதும்  அக்கறை கொள்ளும் உணர்வாளர்களாக மீண்டு வரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆதித்தமிழர் பேரவை
தமிழ்நாடு

No comments:

Post a Comment