அண்மையச்செய்திகள்

Monday 25 January 2016

ஊடகத் தீண்டாமை -ச.சு.ஆனந்தன் வழக்கறிஞர், ஆதித்தமிழர் பேரவை

ஊடகத் தீண்டாமை
"""""""""""""""
இந்திய சாதிய சமூகத்தில் கடையனுக்கு கடையனாய், ஒடுக்கப்பட்ட மக்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்துவரும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடிய அருந்ததிய மக்கள்.

கிராமப்புறங்களில் சக்கிலியர் என்றும், மாதாரி என்றும் அழைக்கப்படுவதோடு விவசாயக் கூலிகளாகவும், பண்ணையங்களில் அடிமைகளாகவும், இருப்பதோடு, நகர்ப்புறங்களில் பழைய செருப்பு தைப்பவர்களாக, தினக்கூலிகளாக, தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் துப்புரவுப் பணி செய்வதோடு மலக்குழியில் இறங்கி கழிவுகளை அகற்றுபவர்களாகவும், தனியார் விடுதிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளில், காவல்நிலையங்களில், துப்புரவு தொழிலிலும், மூன்று லட்சத்திற்கும் மேலான அருந்ததியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஈடுபட்டுவரும் அருந்ததியர்களை அந்த இழிவிலிருந்து மீட்டு அவர்களின் மாண்புக்காகவும், விடுதலைக்காகவும் கால்நூற்றாண்டு காலமாக போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையையும், அதன் தலைவர் அதியமான் அவர்களையும், சாதிய சமூகம் புறக்கணிப்பு செய்வது போல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்வதுதான் மிகவும் கொடுமையானது.

காவி உடை உடுத்தியவர்களையும்,  கலகத்தை மூட்டுபவர்களையும், கவனித்து கூப்பிட்டு விவாதம் நடத்தும் ஊடக தர்மம், மனிதக் கழிவை மனிதன் அகற்றும் அவலத்தை பற்றி பேசுவதற்கு வாய்ப்பளிக்க மறுக்கின்றது,

அப்படியே அழைத்து பேசுவது என்றாலும், சம்மந்தப்பட்டவர்களுக்காக போராடுபவர்களை விட்டுவிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையே அழைத்து பேசி தனது ஊடக தர்மத்தை நிலைநாட்டுகின்றது. இதுதான் ஊடக தர்மத்தின்  நேர்மையா?

சினிமாக்காரர்களின் தேர்தல் முடிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக எழும் கருத்துக்கு இருக்கும் முக்கியத்துவம், மலக்குழியில் விழுந்து நச்சு வாயு தாக்கி மடியும் மனிதனின் உயிரிழப்புக்கு கொடுக்க மனமில்லாமல் போவது ஏன்?

துப்புரவு பணியாளர்கள் தீண்டத்தகாதவர்கள், என்பதால் அவர்களின் மாண்புக்காக போராடும் ஆதித்தமிழர் பேரவையும் அதன் தலைவர் அதியமானும் தீண்டத்தகாதவராகிப் போய் விட்டாரா?

அருந்ததியர் மக்களின் அரசியல் அடையாளம் ஆதித்தமிழர் பேரவை மட்டும்தான்! அவர்களுக்காக போராடும் ஒப்பற்ற தலைவர் அதியமான் மட்டும்தான்!! என்பதை புரிந்திருந்தும் NGO.க்களின் பிரதிநிதிகளைத்தான் அழைத்து பேசுவோம் என்று ஊடகங்கள் முடிவெடுத்தால்! அதை "ஊடகத் தீண்டாமை" என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.
_______________
ச.சு.ஆனந்தன்
வழக்கறிஞர்,

No comments:

Post a Comment