அண்மையச்செய்திகள்

Saturday, 30 January 2016

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் பேரவையின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

30.1.2016
""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேரூந்து நிலையத்தில்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் ஆணக்கிணங்க பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


  மாநாடு குறித்து அண்ணன் நாகராசன் அவர்களின் பதிவு

திருமாவிடம் கேள்வி கேட்பேன் வி.சி.க தொண்டர்
ஆவேசம்.
"""""""""""""
31.1.2016 இன்று காலை சரியாக 8.01 மணிக்கு சங்கராபுரத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் என்னிடம் 9566596058 என்ற எண்ணிலிருந்து தொடர்புகொண்டு 9 நிமிடம் 58 வினாடிகள் பேசினார்
அதனால் (30.1.2016) நேற்று நான் பேசிய உரையின் சுருக்கத்தை பதிவு செய்கிறேம்.
""""""""""""""""
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் அமையப்பெற்றுள்ள கலையரங்கத்தில்
"மக்களைப் பிளவுபடுத்தும்" பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது, மாநாட்டு ஏற்பாடுகளை தோழர் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர், அம்பேத்கர் பெரியார் படங்கள் பிரமாண்டமாக பொருத்தப்பட்டு மாநாட்டு மேடை கம்பீரமாக காட்சியளித்தது.

பிற்பகல் 2 மணிக்கு கருஞ்சட்டை தொண்டர்களின் அணிவகுப்புடன் மாலை 4 மணிக்கு சம்பூகன் கலைகுழுவின் சார்பில் தோழர் நாத்திகனின் புரட்சிகர பாடல்கள் முழங்க தொடங்கிய மாநாட்டில், தி.வி.க தலைவர் அண்ணன் கொளத்தூர்.மணி பொதுச்செயலாளர் தோழர் விடுதலை.ராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தோழர் அப்துல்சமது உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் பேரவையின் சார்பில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க நான் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

உரையின் சுருக்கம்.
"""""""""""""""""""""""""""""
தமிழகம் முழுவதும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை  திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி முன்னெடுக்கும் அனைத்து மாநாட்டு மேடைகளிலும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை அழைத்து உரையாற்ற வாய்ப்பளித்து அழகு பார்க்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு பேரவையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இருக்கக் கூடிய எல்லா அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலை கணக்குப்போட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் "மக்களைப் பிளவு படுத்தும்" பார்ப்பனியத்தை எதிர்த்து மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறது, பெரியார் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் இன்று அண்ணன் கொளத்தூர்,மணி அவர்களும், தோழர் விடுதலை.ராசேந்திரன் அவர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த மாநாடு மக்களை பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிப்பு மாநாடு, பார்ப்பனியம் என்பது ஏதே ஆதிக்க சாதியினரிடன் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க முடியாது அது அனைத்து சாதியினரின் மூளையிலும் காய்ப்பேரிக் கிடக்கிறது, நான் தென் தமிழகத்தைச் சார்ந்தவன், எனக்கு தெரிந்து 90 களில் இருந்து தொடர்ச்சியாக ஆதிக்க சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் யார்மீது நடந்தாலும், அது பள்ளர்கள் மீதா அல்லது பறையர்கள் மீதா என்று பகுத்துப் பார்க்கும் பாகுபாடு இன்றி அதை எதிர்த்து போராடிய அனைத்து போராட்ட களத்திலும் அருந்ததியர்கள் பள்ளர்களோடும், பறையர்களோடும் கரம் கோர்த்து நின்றிருக்கின்றோம், அப்போதெல்லாம் ஏற்படாத சாதி முரண்.

கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீட்டு அறிவிப்புக்குப் பிறகு அருந்ததியர்களை எதிரியாக பார்க்கின்ற மனோநிலைக்கு பள்ளர்களையும் பறையர்களையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
மலம் அள்ளி இழிவை சுமப்பவன் கடைசிவரை இழிவைச் சுமந்தே சாகவேண்டும் என்ற எண்ணம் எந்த ஆதிக்க சாதிக்கும் ஏற்படவில்லை, மாறாக இவர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. நேரடியாக டாக்டர்.கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் எதிர்ப்பது, அருந்ததியர் மக்கள் மட்டுமல்ல அனைவருக்கும் நன்கு தெரியும்,

தனக்கு மேல் எவன் இருந்து கொண்டு ஒடுக்கினாலும் அதைப்பற்றி கவலைப்படாதவன், தான் ஒடுக்குவதற்கும், நசுக்குவதற்கும் ஒரு சாதி இருக்கிறதே என்ற மன நிறைவை பெறுகிறான், அந்த மன நிறைவுதான் பார்ப்பனியம். அதனடிப்படியில்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற மாற்று அரசியலுக்கான மக்கள் நலக் கூட்டணி நடத்திய மாநாட்டில் உரையாற்றிய திருமா அவர்கள், ஊழல் புற்றுக்குள் கட்டுவிரியனை விரட்டிவிட்டு கண்ணாடி விரியன் குடியேறப் பார்க்கிறது. மூன்றாவதாக நச்சுத்தன்மை கொண்ட நாகப்பாம்பும் குடியேறப் பார்க்கிறது என்று பல்வேறு உவமைகளை சுட்டிக்காட்டி எழுச்சியுரையாற்றினார்,

ஆனால் மாநாடு முடிந்த மறுநாளே கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கோரி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றார், சென்னையை தாக்கிய பேய்மழை பெரு வெள்ளத்தால் குவிந்து கிடந்த ஒரு லட்சம் மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு அடி மாடுகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் அவலங்களைக் கண்டித்து தலைவர் அதியமான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில்,

அந்த அவல நிலையைப் பற்றி கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை, துப்புரவு பணியாளரின் எண்ணிக்கை போதவில்லையென்றால் அண்டை மாநிலங்களில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று துப்புரவுத் தொழிலாளர்களை கடைச்சரக்கு போல் ஒப்பிட்டு பேசினார். இது எல்லா உடகங்களிலும் வந்தது, திருமாவின் அந்த பேச்சைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவை தனது கண்டனங்களை பதிவு செய்தும், அதற்காக வருத்தம் தெரிவிக்காத இவர் கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் எந்த எதிர்ப்பும் இல்லாத போதே வலிந்து மன்னிப்புக் கேட்கின்றார் என்று சொன்னால், இதுதான் பார்ப்பனிய மனோநிலை

தனக்கு மேலானவர்கள் என்றால் அவர்கள் கோபப்படும் முன்பே வலிந்து மன்னிப்பு கேட்பதும், தனக்கு கீழானவர்கள் என்றால் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்கிற மனோநிலை தலைவர்களுக்கே இருக்கின்ற போது சாதாரண மக்களிடம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஈழத்துக்காகவும், ஆற்று நீர் உரிமைகளுக்காகவும் ஆவேசக் குரல் கொடுக்கும் தமிழ்த்தேசியத் தலைவர்கள் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை எதிர்த்து குரல் எழுப்புவதில்லை. ஒருவேளை 20 லட்சம் சிங்களர்களின் வாக்கு தமிழகத்தில் இருக்குமானால் ஈழத்தைப் பற்றி இங்கு எவரும் பேச மாட்டார்கள்.

பெரியாரை வீழ்த்துவதற்காக இந்துத்துவ வாதிகளுக்கு ஆதரவாக இங்கு இருக்கும் தமிழ்த் தேசியவாதிகள் திராவிடத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பெரியாரை எதிர்ப்பது, முருகனை முப்பாட்டனாக்குவதும் என்ற ஆபத்தான அரசியலை முன்னெடுத்து வருகிற சூழலில்.

பெரியாரின் கொள்கைப் பிடிப்பிலிருந்து விலகாமல் தமிழர் உரிமை மீட்புக் களத்தில் போராடுவதோடு  துப்புரவுப் பணியாளர்களும் தமிழர்களே என்ற உணர்வோடு அவர்களது அவலத்தைத் துடைக்கும் போராட்டக் களத்தில் ஆதித்தமிழர் பேரவையோடு இணைந்து நிற்கும் இயக்கமாக திராவிடர் விடுதலைக் கழகம் மட்டுமே இருக்கிறது, இதை பேரவை ஆருதலாக பார்க்கிறது அந்த வகையில் இந்த மாநாடு மட்டுமல்ல திராவிடர் விடுதலைக் கழகம் எடுக்கும்  எல்லாவித போராட்ட களங்களிலும் பேரவை உடனிருக்கும் என்று தலைவர் அதியமான் சார்பில் தெரிவித்து காலத்தின் அருமை கருதி எனது உரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.

மாநாட்டு நிறைவுக்குப் பின்
"""'''''''"''''''
எனக்கு பின்பு அண்ணன் கொளத்தூர்.மணி அவர்கள் நிறைவுரையாற்றி மாநாடு இரவு 9.30 க்கு நிறைவடைந்தது. வழக்கம் போல் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள கருஞ்சட்டை இளைஞர்கள் அண்ணன் கொளத்தூர்.மணி அவர்களை சூழ்ந்தது மட்டுமல்லாது. என்னிடமும் புகைப்படம் எடுத்துக்கொண்டு 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எனது முகவரி அட்டையை கேட்டுப் பெற்றுக் கொண்டதோடு உங்கள் பேச்சு எங்களுக்கு புதுத்தெம்பை ஊட்டியது என்று சொல்லி எனது கரங்களைப்பற்றி மகிழ்ந்தனர் அப்படி கூடியவர்கள் கரடிச்சித்தூரை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பறையர் இளைஞர்களும்தான். அப்போது எனக்கு அது வியப்பாக இருந்தாலும், காரணம் அவர்கள் இருக்குமிடம் திராவிடர் விடுதலைக் கழகம் என்று நினைத்து வியப்பிலிருந்து விலகினேன்.
__________
ஆ.நாகராசன்.
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
31.1.2016

No comments:

Post a Comment