அண்மையச்செய்திகள்

Tuesday, 24 November 2015

நவம்பர்.26 திருச்சியை நோக்கி அணிவகுப்போம்! நீலவேந்தன்-ராணியின் தியாகம் எல்லோராலும் போற்றப்படுவதில்லை ஏன்? ------ பொதுச்செயலாளர். ஆதித்தமிழர் பேரவை.

நவம்பர்.26
திருச்சியை நோக்கி அணிவகுப்போம்!
****************
நீலவேந்தன்-ராணியின் தியாகம் எல்லோராலும் போற்றப்படுவதில்லை ஏன்?
•••••••••••••••••••••
2013 ஈழப்போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமாரும் செங்கொடியும் தன்னைத்தானே எரித்துக்கொண்டு ஈழத்தமிழர் உயிர்காக்க உரக்க முழக்கமிட்டு உயிர் ஈகம் செய்துகொண்டனர். அப்படி அவர்கள் செய்துகொண்ட அந்த ஈகம் இன்றைக்கும் எல்லோராலும் போற்றப்படுவதை நாம் அறிவோம்.

அதுபோலவே,  ஈழத்தமிழருக்காக நீலவேந்தனும் ராணியும் உயிர் ஈகம் செய்திருந்தால் இந்நேரம் ஆகா! ஓகோ! என அனைவராலும் போற்றப்பட்டிருப்பார்கள் ஆண்டுக்காண்டு கொண்டாடப்பட்டிருப்பார்கள் ஆனால், இவர்களோ! அருந்ததியர் இடஒதுக்கீட்டை காப்பதற்கும் அதை உயர்த்துவதற்கும்தானே! உயிர் ஈகம் செய்துகொண்டனர்.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும் இங்கிருக்கும் தமிழர்களுக்காகவும் இடைவிடாது போராடும் பொதுசமூகத்துடன் நாமும் சேர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அதே பொதுசமூகம் நம்மோடு சேர்ந்து அருந்ததியர் இடஒதுக்கீட்டை காப்பதற்கு அணுவளவும் முன்வராமல்  ஒதுக்கிக்கொள்வது ஏன்?

இடஒதுக்கீடு என்பது
சலுகையா? உரிமையா?
----------------------
இடஒதுக்கீட்டைப்பற்றி கருத்துச்சொல்லும் பெரும்பாலோனர் 'சலுகை' என்றும், பலர் 'உரிமை' என்றும் சொல்லுவதோடு, வாழ்வாதார கோரிக்கை என்றும்கூட சொல்லி வருவதை நம்மால் கேட்க முடிகிறது.

அவர்கள் சொல்லுவதுபோல் இடஒதுக்கீடு என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கானது மட்டும்தானா? அப்படி என்றால்..

மலத்தை அள்ளி தலையில் சுமப்பவனும், அறுந்துபோன செருப்பை தைப்பவனும், பண்ணையத்தில் ஊழியம் செய்பனும் கூனிக்குறுகி வாழ்வதற்கான ஆதாரத்தை தேடிக்கொண்டு, வாழ்வை ஓட்டிக்கொண்டுதானே! இருக்கின்றான்.

ஊரை அடித்து உலையில் போடுபவனும், வழிப்பறிசெய்து கொள்ளயடிப்பவனும், அடுத்தவன் சொத்தை அபகரித்து அலங்கார வாழ்வை அமைத்துக்கொள்பவனும் நாட்டில் நலமோடு இருக்கத்தானே! செய்கின்றான்.

இப்படி எண்ணற்றோர் ஏதோ ஒரு வழியில் வாழ்வற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டு வறுமையோ! வளமையோ! எப்படியானாலும் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றான்.

அப்படி தொடரும் வாழ்க்கை பயணத்தில் வழிமறித்து நிற்காத ஆதிக்கசக்திகள். இடஒதுக்கீடும், வாழ்வாதாரத்திற்கான ஒன்றுதானே! என நினைக்காமல் அதைமட்டும் ஏன்? வழிமறித்து முறியடிக்க பார்க்கின்றனர்.

இட ஒதுக்கீடு என்பது
அதிகாரத்தின் குறியீடு
------------------
ஏனென்றால் இடஒதுக்கீடு மட்டும்தான்! மணியாட்டுபனுக்கு இணையான மரியாதையை தேடித்தருகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற அதிகாரம் கொண்ட பதவிகளில் அனைவரையும் சமமாக அமரவைத்து அழகு பார்க்கிறது.

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக ஆரியம் ஏவிய அடக்குமுறைகளாலும்,  பார்ப்பனியம் பின்னிய சதி வலைகளாலும் கல்வியை இழந்து, நிலத்தை இழந்து, ஆயுதத்தையும் இழந்து வாய்புகள் முற்றிலும் மறுக்கப்பட்டு நாயினும் கீழாக நடத்தப்பட்ட நம்மை.

பார்ப்பனர் மட்டுமே! படிக்கமுடியும், பதவிகளில் இருக்கமுடியும் என மனுநீதி கற்பித்த கற்பிதங்களை ஏற்கவைத்து, அடங்கிப்போனவர்களை  பிற்பட்டோராகவும், எதிர்த்து நின்றவர்களை தாழ்த்தப்பட்டோராகவும் பிளவுபடுத்தி மோதவிட்டு அதிகாரத்திற்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டது.

இதனால் பார்ப்பனர்களுக்கு இணையாக நாமும் வரவேண்டும் என்ற எண்ணம், துளிகூட மனதில் எழாமல் மூளை மழுங்கடிக்கப்பட்டு, எல்லாம்! நம் தலையெழுத்து என ஏற்றுக்கொண்டு நமக்குள்ளேயே மோதிக்கொண்டிருந்தோம். அப்படி, மோதிக்கொண்டிருந்த நம்மை! தட்டி எழுப்பி மனிதர்களாக தலைநிமிர்த்திய மகத்தான தலைவர்கள்தான்! அம்பேத்கரும் பெரியாரும்.

இந்த நாட்டில் எத்தனையோ மகான்களும், மகாத்மாக்களும் தோன்றினார்கள் அப்படி தோன்றிய மகான்களோ மகாத்மாக்களோ இந்த அநீதிக்கு எதிராக போராட முன்வராதபோது, அதிரடியாய் போர் தொடுத்தவர்கள், அனவரையும் அரவணத்துக்கொண்டவர்கள் அம்பேத்கரும் பெரியாரும் மட்டும்தான்.

அப்படி அவர்கள் நடத்திய சமூகநீதி யுத்தத்தின் காரணமாக கிடைத்திட்ட அதிகாரத்திற்கான குறியீடுதான் இடஒதுக்கீடு.

அந்த இடஒதுக்கீடுதான், அவாள்கள் மட்டுமே! அலங்கரித்து வந்த அதிகாரப்பதவிகளில் தாழ்த்தப்பட்டோரையும் பிற்பட்டோரையும் அமரவைத்து கோலோச்ச வைத்தது.

பள்ளர் பறையரையும் உசுப்பி
பகை மூட்டிய பார்ப்பனியம்
----------------------
நேற்றுவரை மலத்தை அள்ளி தலையில் சுமந்தவன் மாவட்ட ஆட்சித்தலைவராக அதிகாரம் செலுத்துவதா!
சாலையோர புழுதியில் பழையசெருப்பு தைத்தவன் நீதிபதியாக மாறி நெஞ்சை நிமிர்த்தி நடப்பதா!
பிணத்தை எரித்து பிழைப்பு நடத்தி வந்தவன் மருத்துவர்களாக மாறி மக்களுக்கு கடவுள்களாக மாறுவதா!
என்ற ஆதிக்கவர்க்கத்தின் பார்ப்பனியபுத்தி ஆத்திரத்தோடு தலைதூக்கி இடஒதுக்கீட்டை தகர்க்கப்பார்க்கின்றது.

எனவே இடஒதுக்கீட்டை வெறும் சலுகையாக அல்லது உரிமையாக பார்க்க முடியாது, அது அதிகாரத்தின் குறியீடாகத்தான் பார்க்கவேண்டும். அப்படி அதை சரியாக புரிந்துகொண்டு களத்தில் நின்றவர்கள்தான் நீலவேந்தனும் ராணியும்.

சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இடஒதுக்கீட்டின் மகத்துவத்தைப்பற்றி புரிந்து கொள்ளாமல் புலம்பிக்கொண்டு புழுக்களாக நெளிந்து கொண்டு இருக்கும், நம்மை, உசுப்பிட தன்னைத்தானே  பொசுக்கிக்கொண்டு தலைமுறையின் தலைநிமிர்வுக்காக தன்னுயிரை தந்தார்கள்.

இப்படி சமூகநீதி கொள்கையை சவக்குழிக்கு அனுப்ப நினைக்கும், பார்ப்பானுக்கு இருக்கும் அதே புத்திதான் பள்ளரையும் பறையரையும் தொற்றிக்கொண்டு சக்கிலியன் அதிகாரத்திற்கு வருவதை ஏற்கமறுத்து இன்றுவரை இடையூறு மேல் இடையூறு செய்து கொண்டே இருக்க செய்கின்றது.

சக்கிலியன் அதிகாரம் பெறுவதை சக தாழ்த்தப்பட்டவனே!  ஏற்றுக்கொள்ளாத போது, பார்ப்பனிய புத்திகொண்ட ஏனைய அதிகாரவர்க்கம் எப்படி ஏற்றுக்கொள்ளும், இவர்களை போற்றிப்புகழும்.

அப்பேற்பட்ட பார்ப்பனியத்தின் பல்லை உடைத்து இடஒதுக்கீட்டின் மகத்துவத்தை எடுத்துரைக்க ஈகம் செய்திட்ட நீலவேந்தன் ராணியை எல்லோரும் போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதை விட முதலில் நாம் போற்றுவோம்.
____________________
நீலவேந்தன் ராணியை நித்தம் நித்தம் போற்றுவோம்!
நெருக்கடிகள் சூழும்போது நெஞ்சை கனலாய் ஆக்குவோம்!!
""""""'""""""""""""""""""""""""""""
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a comment