அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

வருமுன் காப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் செயலற்று கிடக்கும் நிர்வாக சீர்கேட்டினால் உயிரிழப்பு, பொருளிழப்பு என பரிதவிக்கும் கடலூர் மக்களை காப்பாற்ற தவறியுள்ளது. தமிழக அரசு. ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு

வருமுன் காப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் செயலற்று கிடக்கும் நிர்வாக சீர்கேட்டினால் உயிரிழப்பு, பொருளிழப்பு என பரிதவிக்கும் கடலூர் மக்களை காப்பாற்ற தவறியுள்ளது. தமிழக அரசு.
ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு 12.11.2015
"""""""""""""""""
அய்யா அதியமான் அறிக்கை
"""""""""""""""""""""""""
கடலூர் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழையின் காரணமாக பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையத்தில் குடியிருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெருமாள்(65), சிவசங்கரன்(42), செல்வி(35), சிவா(15), மாரிமுத்து(13), வீரமுத்து(6), பவானி(5), தினேஷ்(5) ஆகிய 8 அருந்ததியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகியுள்ளனர்.

மேலும் குடிசைகளில் வாழும் எளிய சமூகத்தை சேர்ந்த சேரிவாழ் மக்கள் 33 பேர் உயிரை இழந்து உடமைகளை இழந்து பெரும் துயரத்தில் பரிதவித்து வருகின்றனர், இதுவரை 500 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு,1500 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உணவின்றி டெங்குநோய் அபாயத்தில் தவித்து வருகின்றனர்.
தானே புயலின் கோரத் தாக்குதலினால் பாதிப்புக்கு உள்ளாகி நூற்றுக்கணக்கில் உயிர்களை இழந்து, பயிர் அழிவுகளை சந்தித்து, உடமையற்றவர்களாக வாடிக்கொண்டிருந்த கடலூர் மக்கள். கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வந்த சூழலில், இந்த வெள்ள பெருக்கு சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி அன்று மதுவிற்பனை இலக்கை 375 கோடி என தீர்மானித்து, முன்கூட்டியே அதற்கான திட்டங்களை தீட்டி இலக்கை எட்டி மக்களின் வாழ்க்கையில் வேதனையை விதைத்துள்ள தமிழக அரசு. கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே கணித்து! அதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு இழப்புகளை தடுத்திருக்க வேண்டும்.
மாறாக இழப்புகள் ஏற்பட்ட பின்பு கொடைநாட்டிலிருந்து ஓடி வந்து கூட்டம் நடத்தும் முதல்வரின் நடவடிக்கை "தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற கதைதான்" ஆறு மாதங்களுக்கு முன்பே இதே கூட்டத்தை கூட்டியிருந்தால் கடலூர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்புகளை தடுத்திருக்கலாம்.
முன்பிருந்த அரசு போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து அக்கரையின்றி அலட்சியம் காட்டும் தமிழக அரசின் செயலற்ற போக்கினால் தமிழக மக்கள் இதைப்போன்ற எண்ணற்ற இழப்புகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
ஆக இனிமேலாவது செயலற்று கிடக்கும் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து, கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்கு ஈடு செய்யும் விதமாக உடனடி தீர்வாக, உயிர் இழந்தோருக்கு தலா 5 லட்சம் இழப்பீடும், முழுமையாக வீடுகளை இழந்தோருக்கு கான்கிரீட் வீடுகளும், இடிந்துபோன வீடுகளுக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடும், விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பயிரிழப்புகளுக்கு ஏற்றவாறு இழப்பீடும் வழங்கி கடலூர் மக்களின் துயரத்தை போக்கிட முன்வர வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு.
மின்சாரமின்றி, உணவின்றி, குடிக்க நீரின்றி, உடுத்த உடையின்றி உடைமைகளை இழந்து, டெங்கு நோய் அச்சத்தில் இருக்கும் மக்களை பாதுகாத்திட மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
இவண்.
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
12.11.2015

No comments:

Post a Comment