அண்மையச்செய்திகள்

Sunday 8 October 2017

ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது

ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.2017 காலை 11 மணிக்கு தேனியில் கூடியது. கூட்டத்திற்கு பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் நாகராசன் வரவேற்புரை ஆற்றினார். அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை விரிவாக பகிர்ந்து கொண்டனர். கூட்ட முடிவில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் இன்றைய தமிழக அரசியல் நிலை குறித்தும் பேரவை முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அரசியல் வழிகாட்டுதல் விளக்க உரையாற்றினார்.

மாலை 7 மணி வரை நடைபெற்ற
கூட்ட முடிவில் தேனி மாவட்ட செயலாளர் இளந்தமிழன் நன்றி கூறினார்.

மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
**************************
1) வீரவணக்க தீர்மானம்
""""""""""""""""""""""""""""""""""""
மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசினால் திணிக்கப்பட்ட 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிப்புக்கு உள்ளாகி தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி அரியலூர் மாவட்ட குழுமூர் அனிதாவுக்கும், மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் கருத்துப் போர் நடத்தி களமாடிய காரணத்தால்
படுகொலைக்கு உள்ளான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும், சாதிய - மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர் கோவை ஃபாருக், அரியலூர் நந்தினி, திட்டக்குடி சிவக்குமார், ஆகியோருக்கும் ஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

2). நீட் தேர்வில் இருந்து முழு விலக்களிக்க கோரும் தீர்மானம்!
"""""""""""""""""""""""""""""""""""""""
'கல்வி' மாநில அதிகாரத்தின் கீழ் இல்லாமல் பொதுப் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு தற்போது 'நீட்' என்னும் 'தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நம் மீது திணித்துள்ளது.

இதன் காரணமாகவே நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரிய தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காமலேயே கிடப்பில் போனது.

ஒப்பீட்டளவில் கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி என்னும் திட்டத்தைப் போன்று வேறு எந்த மாநிலமும் கொண்டு வரவில்லை.

இவ்வாறு மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில், நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பா.ச.க அரசின் சதிச்செயல் தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

3). இந்தி மற்றும் சமத்கிருதத் திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்.
""""'""""""""""""""""""""""""""""""""""""
1968-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

சாலையோர மயில் கற்கள், இரயில் நிலையங்கள், வங்கி போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றின் மூலமாகவும், தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற மத்திய அரசின் திட்டத்தை, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் வலிந்து திணித்து, சமத்கிருதத்தையும், இந்தியையும், தமிழகத்தின் மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மத்திய அரசால் வலிந்து திணிக்கப்படும், இந்தி சமத்கிருத திணிப்பை இந்த செயற்குழு எதிர்க்கிறது.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும், என இந்த செற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

4). மாநில சுயாட்சி தீர்மானம்.
""''''''''''''""""""""""""""""""""""""""""""'''
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம். அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சமூகநீதியின் அடைப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு போன்றவையும், ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலங்களுக்கான வரி வசூல் செய்யும் உரிமைகள் பறிப்பு போன்றவைகளும், மாநில வளர்ச்சிகளுக்கான நலத்திட்டங்களை முடிவெடுத்து நடைமுறைப் படுத்த மத்திய அரசையே நம்பிக் கிடக்கும் அவலங்கள் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருப்பதால், மாநிலங்களுக்கான உரிமைகளை மாநிலங்களே தீர்மானிக்க மாநில முன்னேற்றத்தை தீர்மானிக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும், அதற்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தி.மு.க கொண்டு வந்த சட்டமன்ற தீர்மான மசோதாவை மத்திய அரசு ஏற்று மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

5). தமிழக அரசு பதவி விலக வேண்டி தீர்மானம்.
"""""""""""""""""""""""""""""""""""""”""
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கொண்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் தமிழக அ.இ.அதிமுக எடப்பாடி அரசு மக்களின் நன் மதிப்பை இழந்ததோடு, தனது ஆட்சிக்கான முழு பலத்தையும் இழந்து நிற்கிறது, எனவே மத்திய அரசிற்கு பயந்து மாநில உரிமைகளை பறிகொடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முழு கவனத்தை செலுத்திவரும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

6). நீலவேந்தன் ராணி மற்றும் மகேசுவரனை சமூகநீதிப் போராளிகள் என்று அறிவிக்க வேண்டி தீர்மானம்
"""""""""""""""""""""""""""""""""""""""""
சமூகநீதியின் அடிப்படையில் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் பலனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அருந்தததியர்கள் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகின்றனர், இந் நிலையில், அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் அருந்ததியர் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆறு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து போராடி வருகிறது, இந்த கோரிக்கையை கலைஞர் ஆட்சிக்கு பின்னால் வந்த அ.இ.அதிமுக அரசு ஏற்காமல் மெத்தனம் காட்டி வந்ததனால் கடந்த 2013 செப்டம்பர் 26 ஆம் நாள் திருப்பூரில் பேரவையின் அப்போதைய நிதிச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் நீலவேந்தன் அவர்களும், 2013 நவம்பர் 26 ஆம் நாள் திருச்சியில் அப்போதைய மாநில மகளிர் அணி செயலாளர் தோழர் இராணி அவர்களும், 2017 ஏப்ரல் 11 ஆம் நாள் திருப்பூரில் அப்போதைய திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வாவிபாளையம் மகேசுவரன் அவர்களும் தீக்குளித்து தன்னைத் தானே எரித்துக் கொண்டு உயிர் ஈகம் செய்து கொண்டனர்.

சமூகநீதி தழைத்தோங்கிய தமிழக மண்ணில் சமூகநீதியின் மீட்சிக்கும், நீட்சிக்கும் தன்னைதானே எரித்துக் கொண்டு உயிர் ஈகம் செய்து கொண்ட மூவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து, மூவரையும் சமூகநீதி போராளிகள் என அறிவித்து, திருப்பூரிலும், திருச்சியிலும் அவர்களது நினைவாக மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்று இந்த செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

7) மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற தடை கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த ஆண்டு 2016 .ல் 50 க்கு மேற்பட்ட தூய்மைப் பணி புரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

8) மாமன்னர் ஒண்டிவீரன், வீரத்தாய் குயிலி, மதுரைவீரன் ஆகிய வரலாற்றுத் தலைவர்களுக்கு மதிப்பளிக்கக் கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""
முதல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரருக்கு கலைஞர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மணிமண்டப் பணிகளை முழுமை படுத்துவதோடு, மணிமண்டபத்திற்கு பாத்தியப்பட்ட இடம் அனைத்தையும், முழு பயன்பாட்டிற்கு எடுத்து, அதில் ஒண்டிவீரனாரின் வரலாற்றுத் தகவல்களையும், சுற்றுலா தளத்திற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி தருவதோடு, மணிமண்டபத்திற்கு உள்ளே நிறுவப்பட்டுள்ள ஒண்டிவீரனாரின் சிலையை மணி மண்டபத்திற்கு வெளியே பெரிய பீடம் அமைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி நிறுவ வேண்டும்,

இதே போன்று முதல் இந்திய விடுதலைப் போராட்ட தற்கொலைப் போராளி வீரத்தாய் குயிலியின் நினைவு சின்னம் தற்போது வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது, இதனால் அருந்ததியர் மக்கள் இயல்பாகச் சென்று வீரவணக்கம் செலுத்த முடியாத வகையில் பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருவதால், அந்த நினைவுச் சின்னத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி வீரத்தாய் குயிலியின் வீரம் செறிந்த தியாகத்தை பறை சாற்றும் வகையில் மணிமண்டபமாக கட்டி எழுப்ப வேண்டும், அதில் குயிலியின் வரலாற்றுத் தகவல்களை பதிவிட்டு வரு தலைமுறைக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் முதல் சாதிஒழிப்பு சமூகநீதிப் போராளி மதுரைவீரனுக்கு அவர் வாழ்ந்த தற்போதைய பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடியில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும், இது போன்ற வரலாற்றுத் தலைவர்களின் தியாகத்திற்கு உரிய மரியாதை செய்து மேற்கண்ட பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப் படுத்திட வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

9) அருந்ததியர்களுக்கு ஆறு விழுக்காடு உள் ஒதுக்கீடும், கிராமப்புற தலித் மக்களுக்கு உழவு நிலமும் கோரும் தீர்மானம்!
""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழகத்தில் வாழக்கூடிய பட்டியலின மக்களில் மூன்றில் ஒரு பங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களின் வாழ்வியலையும், மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு ஏற்கனவே வழங்கப்படிருக்கும் 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும்,

இதே போன்று கிராமப்புறத்தில் வாழக்கூடிய விவசாயக் கூலிகளான ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இரண்டு ஏக்கர் உழவு நிலமும், அதனுடன் கூடிய மனையிடமும் வழங்க வேண்டும்,

மேலும் தழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டு தற்போது வேறு நபர்களால் சட்ட முரணாக கையகப்படுத்தியுள்ள பஞ்சமி நிலம், உச்சவரம்பு நிலம், பூமிதான நிலம் போன்றவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
8.10.2017






























No comments:

Post a Comment