அண்மையச்செய்திகள்

Wednesday 25 October 2017

வரலாறு நெடுக.. வலியவர்களின் பாதுகாப்பிற்குதான் சட்டங்கள் -- பொதுச்செயலாளர்

வரலாறு நெடுக.. வலியவர்களின் பாதுகாப்பிற்குதான் சட்டங்கள்
""""""""""""""""""""""""""""""'
வாங்கிய கடனை திருப்பி கட்டமுடியாமல், தற்கொலை செய்து கொண்ட திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி என்ற ஜி.வெங்கடேஷ்வரன் என்பவரது மரணத்தில் இருந்து உருவெடுத்ததே! கந்துவட்டி தடைச்சட்டம்.
2013 நவம்பர் 16 ல் உருவாக்கப்பட்ட இந்த சட்டம் இதுவரை யாரை தண்டித்து இருக்கிறது? எளியோரை வாட்டி வதைக்கும் வட்டிக் கொடுமைகளுக்கு ஆளாகும் மக்களைத்தான் தற்கொலைக்குத் தள்ளி படுகொலை செய்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக நடைமுறையாக்கி இருந்தால் தீண்டாமை கொடுமைகளுக்கு சிறிதளவாவது தீர்வு கண்டிருக்கலாம், கையால் மலமள்ளும் தடைச்சட்டத்தை கடுமையாக்கி இருந்தால், மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் இழிவை துடைக்கும் நிலை துளியளவாவது கண்டிருக்கலாம்!
இது போன்ற எண்ணற்ற சட்டங்கள், இப்படித்தான்!
எளியவர்கள் என்றால் எந்த அசைவும் இன்றி கிடப்பது, வலியவர்கள் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வாலாட்டுவது, என்று இருப்பதால்தான்!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே நான்குபேர் கருகியுள்ளனர்.
கருகி செத்தபின்பு கந்துவட்டிக்காரனை கைதுசெய்வதால் என்ன பலன்?
சட்டத்திற்கு முரணாக இன்று கையூட்டுப் பெற்றுக்கொண்டு நான்கு பேருக்கு வாய்க்கரிசி போட்ட காக்கிகள், நாளை கந்துவட்டிக்காரனை காப்பாற்ற அவனது காலையும் கழுவிக் குடிப்பார்கள். இதுதானே நடக்கப்போகிறது.
மாட்டுக்காக, நோட்டுக்காக, நீட்டுக்காக, ஜி.எஸ்.டிக்காக போட்டி போட்டுப் போரடிய நாம்! நாளை வேறு ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு ஓடப்போகிறோம்! ஊடகங்களுக்கும் இப்போதைக்கு இது ஒரு தீனியாகவே மென்று தீர்க்கும், அவ்வளவுதான்!
என்ன செய்ய.. கொடுமைகளைக் கண்டு கொத்தெழ வேண்டிய மக்கள், எல்லாவற்றையும் இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை பழக்கமாக்கிக் கொண்ட பின்னர், ஆட்சியாளர்கள் அச்சப்படவா போகிறார்கள்!
"சட்டம்" உயிர் பெறுவதும், உயிரற்றுப் போவதும், நடைமுறைப் படுத்துகிறவனின் சமூகப் பின்னணியோடு கூடிய மனநிலையைப் பொறுத்தே அமைகிறது.
ஆ.நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.

No comments:

Post a Comment