அண்மையச்செய்திகள்

Tuesday, 12 December 2017

உடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது - தலைவர் அதியமான் அறிக்கை

உடுமலை சங்கர்
ஆணவக் கொலை தீர்ப்பு:
ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது
ஆதித்தமிழர் பேரவை
தலைவர் அதியமான் வெளியிடும் அறிக்கை
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த சங்கர், வேறொரு சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காக, அவ்விருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி உடுமலைப் பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றுக்கு சென்ற போது மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டவெளியில் பலபேர் முன்னிலையில் வெட்டப்பட்டு சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான சாதிய ஆணவச் செயலை அன்றே ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டித்ததோடு, சங்கரின் இல்லத்திற்கும், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கெளசல்யாவை நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியது.
இப்படுகொலை தொடர்பாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே ஆணவக் கொலைக்கு எதிராக விதிக்கப்பட்ட முதல் தண்டனை இது. இந்தத் தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய அடியாகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் போராடும் நம்மை போன்றவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்துள்ளது.
இந்த வழக்கிற்காக போராடிய கௌசல்யாவிற்கும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, கொலை நடந்த நாள் முதல் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் வெளி உலகுக்கு நினைவூட்டி, தொடர்ந்து செய்தி வெளியிட்டு வழக்கிற்கு வழுவூட்டிய உடகவியலாளர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
12.12.2017

No comments:

Post a comment