அண்மையச்செய்திகள்

Thursday, 2 November 2017

மாவீரன் செகுடந்தாளி முருகேசன் கொலை செய்யப்பட்ட நாள் 17-11-1999 - ஏன் இந்த கொலை ? எதற்காக நடந்தது ? பின்னணி என்ன ? இதோ! மக்கள் மன்றத்திற்கு செகுடந்தாளி முருகேசனின் உறைந்து போன இரத்த துளிகளை கொண்டு வருகிறது ஆதித்தமிழர் பேரவை !

மாவீரன் செகுடந்தாளி முருகேசன் கொலை செய்யப்பட்ட நாள் 17-11-1999 - ஏன் இந்த கொலை ? எதற்காக நடந்தது ? பின்னணி என்ன ? இதோ! மக்கள் மன்றத்திற்கு செகுடந்தாளி முருகேசனின் உறைந்து போன இரத்த துளிகளை கொண்டு வருகிறது ஆதித்தமிழர் பேரவை !
****************************
செகுடந்தாளி முருகேசன் சாதிவெறி , சாதித் திமிர் சாதி கொடுமைகள் : இவைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுக் கரம் உயர்த்திய ஒரே காரணத்திற்காக ..
அதே சாதிவெறி , சாதித் திமிர் சாதி கொடுமையினால் சாதிவெறி பிடித்த ஆதிக்க கவுண்டர்களால் அடித்து கொலை செய்யப்பட்டவர் தான் செகுடந்தாளி முருகேசன் !
ஒரு சாதி ஒழிப்பு போராளி அருந்ததியர் விடுதலை போராளி அவர்...
அந்த நாள்...
ஏ கருப்பாத்தா ஓம் புருஷன குடியானவுனுங்க போட்டுப் போட்டு அடிக்கிறானுங்க ! ஓடியா புள்ள !".
- வியர்க்க விறுவிறுக்க அண்டை வீட்டு மாறன் கத்திய குரலை கேட்டு
அதிர்ந்து போனால் கருப்பாத்தா - முருகேசனின் மனைவி !
பிறந்த தன்னுடைய எட்டு மாத பச்சிளம் குழந்தையை வாரிசுருட்டி எடுத்த கருப்பாத்தா ; நெஞ்சம் பதற பதற ஓட தொடங்கினாள் கணவனை நோக்கி
பின்னால் பார்வையில்லாத முருகேசனின் பெற்றோரும் ஓடினார்கள் கதறிக் கொண்டு !
அங்கே ரத்த வெள்ளத்தில் முருகேசன் துடித்து புரள ....அருந்ததிய இளைஞர்கள் சிலரின் உதியவியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் கூட , அன்றிரவே மருத்துவமனையில் மரணமடைந்தார் முருகேசன் !
கையில் குழந்தையுடன் கணவரை இழந்தார் கருப்பாத்தா !
"இழப்பதற்கு ஒன்றுமில்லை உண்மைதான் ஆனால் ...ஆனால் கணவன் இருந்தானே !அவனையும் இழந்து அவன் கட்டிய தாலியையும் இழந்து பூவை இழந்து பொட்டை இழந்தது கருப்பாதா மட்டுமல்ல : தாயின் இடுப்பில் , தாயின் இடுப்பில் , வாயில் கை வைத்து மிரள மிரள பார்க்கும் இந்த பச்ச மழலை தன் தந்தையையும் இழந்து விட்டானே!
இது கொடுமையில்லையா ?
இது சாதி இல்லையா ?
இது சாதிவெறி இல்லையா ?
ஆம் ! இது மரணமல்ல திட்டமிடப்பட்ட அப்பட்டமான - சாதிவெறியர்களால் செய்யப்பட்ட கொலை
ஏன் இந்த கொலை ? எதற்காக நடந்தது ? பின்னணி என்ன ?
இதோ ! மக்கள் மன்றத்திற்கு செகுடந்தாளி முருகேசனின் உறைந்து போன இரத்த துளிகளை கொண்டு வருகிறது ஆதித்தமிழர் பேரவை !
கோயம்புத்தூர் - அவிநாசிக்கு நடுவில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஊர் சோமானுர்.அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள் இருக்கும் சிறிய கிராமம் செகுடந்தாளி "ஆதிக்க கவுண்டர்கள் புடை சூழ ,அவர்களால் "சேரி" என்று சொல்லப்பட்ட செகுடந்தாளியின் ஒதுக்குப்புறத்தில் அவர்களின் ஆதிக்க வெறியை தாங்கி கொண்டு வாழ்ந்தது அருந்ததியர் குடும்பம் முப்பது.
இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் கூலி வேலை செய்துகொண்டு இருந்தாலும் "தன்மானம் இழக்க கூடாது " என்றும் ' அடங்கி போனது போதும் ; ஆதிக்கத்திற்கு தலை வணங்காதே : எழுந்து நில் :
துணிந்து நில் ; எதிர்த்து குரல் கொடு " - என்றும் முதன் முதலில் அங்கே குரல் கொடுத்த 28 வயது இளைஞன் தன முருகேசன் ! ஆம் செகுடந்தாளி முருகேசன் ஒரு விசைத்தறித் தொழிலாளி !
முருகேசன் கொலை செய்யப்பட்டது 1999 - ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ! மிகச்சரியாக இதிலிருந்து ஓராண்டுக்கு முன்னாள் ; அதாவது 1998 - ஆம் ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் ...
அது தீபாவளி நேரம் ! அதனால் அவிநாசி , ராமியம்பாளையத்தில் உள்ள தன மாமனார் (மனைவியின் தந்தை ) வீட்டிற்கு போய்விட்டு செகுடந்தாளி திரும்புவதற்காக அவிநாசியில் இருந்து சோமனூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறுகிறார் செகுடந்தாளி முருகேசன், அவருடன் ஆறு மாதம் தாய்மை ஏந்திய அவரின் மனைவி கருப்பாத்தாவும் வருகிறார்,பிரச்சனை அங்கே தான் தொடங்குகிறது.
அரசு பேருந்தில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்காருகிறார் முருகேசன், உடனே பக்கத்தில் இருந்த சாதி வெறி பிடித்த கவுண்டரை சாதியைச்சேர்ந்த ஒருவர் ...
"ஏண்டா சக்கிலிய நாயே ! எப்படி டா எம் பக்கத்தில் நீ உக்காரலாம் ..சக்கிலிய நாயே ! மேலே எந்திரிடா " என கத்தியிருக்கிறார் !
" சும்மா கத்தாதீங்க ! ஏனுங்க ... நீங்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கின மாதிரித்தான் நானும் டிக்கெட் வாங்கி வாரேன் !" இப்படி பதில் சொன்னார் முருகேசன் .
அடுத்த வினாடி " ஏண்டா சாதிகெட்ட நாயே ! உசர உசர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமாடா ? செத்த மாடு திங்கிற சக்கிலி நாயே ! எனக்கு சமமா உக்காருவியா நீ ? எந்திரிடா மேலே " - கத்தி குதறினார் சாதிவெறி பிடித்த கவுண்டர்.
"முடியாதுங்க ! உங்கள மாதிரிதான் நானும் காசு கொடுத்து வாறேன்- முருகனின் பதிலில் தன்மான உணர்ச்சியும் , உறுதியும் இருந்தது .
அவ்வளவு தான்! பலமாக கத்தி வண்டியை நிறுத்திய கவுண்டர் பாதி வழியிலேயே இறங்கி விட்டார் ; முருகேசனும் , அவர் மனைவியும் ஊர் வந்து சேர்ந்தார்கள்.
அன்றிரவு 8 மணி அளவில் வீட்டில் கணவனும் மனைவியுமாக சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஊர்க்கவுண்டர்கள் ஒன்றுகூடி முருகேசனை அவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து ,
"ஏன்டா சக்கிலி நாயே ! சட்டமாடா பேசுற! இவனுங்கள இப்படியே விட்டுட்டா , நாளைக்கு பொண்ணு கேட்பானுங்க நம்மகிட்ட ! அடிங்கடா இவன " - என்று கத்தியபடி ,முருகேசனையயோ அவரது மனைவியோ பேசவிடாமல், அடித்து உதைத்து நார்நாராக்கிவிட்டார்கள் கதறியபடி தடுக்க வந்த 6 மாத கர்ப்பிணியான மனைவி கருப்பாத்தாவையும் எட்டி உதைத்து விட்டு "ஜாக்கிரதை - குடியானவனுகளுக்கு எதிரா பேசுனீங்க தொலைச்சு புடுவோம் " என்று எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் ஊர் கவுண்டர்கள்.
கவுண்டர்களால் அடிக்கப்பட்டு இரத்த காயங்களுடன் கிடந்த முருகேசனை அருந்ததிய இளைஞர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். தகவல் காவல்துறைக்கு போனது. முதல் தகவலறிக்கை முருகேசனின் வாக்குமூலத்தில் தயாரானாலும் எந்த வித நடவடிக்கையும் இல்லை 15 நாட்களுக்கு மேலாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை !
இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை பிரச்னையை கையில் எடுத்தது . பேரவையின் நிறுவன தலைவர் இரா அதியமான் , அமைப்பாளர் சு.குப்புராசு , உயர்மட்டப் பொறுப்பாளர்களான இரவிக்குமார் ,நீலவேந்தன் ,தென்னரசு ,உபி இராசு , தீபா உட்பட பேரவை தோழர்கள் செகுடந்தாளியில் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தார்கள் அப்போது எடுத்த உடனடி முடிவின் படி ..
பேரவை தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சோமனூரில் சாலை மறியலில் இறங்கினார்கள், பேரவையின் சாலை மறியலின் போது வேறு சில அருந்ததிய அமைப்புகளும் அதில் பங்கு கொண்டன .
அதுமட்டுமல்ல ; முருகேசனை அடித்த சாதி ஆதிக்ககாரர்களை கைது செய்யாதது மட்டுமல்ல ; அவர்களினால் . கிராமத்தில் அருந்ததியர்களுக்கு பாதுகாப்பும் இல்லை , அதனால் கிராம மக்கள் அகதிகளாக வெளியேறும் போராட்டமாகவும் அந்த சாலை மறியல் அமைந்ததனால் , அருந்ததிய மக்கள் திரண்டு வரத் தொடங்கினார்கள், சென்னியாண்டார் கோயில் தொடக்கம், கருமத்தம்பட்டி நாலு ரோடு வரை பெருகிய இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் 238 ஆண்கள் உட்பட பெண்கள் பலரையும் கைது செய்து வண்டிகளில் ஏற்றியது.
மாலையில் கைது செய்யப்பட்ட மக்களை 11 மணியளவில் திருப்பூர் அனுப்பர் பாளையம் வெங்கடேச திருமண மண்டபத்தில் வைத்து , அங்கே பெண்களையும் குழந்தைகளையும் 'அம்போ ' என்று விட்டு விட்டு இரவு ஒரு மணிக்கு திருப்பூர் நடுவர்மன்ற நீதிபதி வீட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள் காவல்துறையினர்.
அப்போது பேரவையின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் ஒருவரான தென்னரசு, துணிச்சலுடன் "அய்யா நாங்கள் எதற்காக கைது செய்யப்பட்டுளோம் என்று தெரியாது ,அத்தோடு எங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் , குழந்தைகள் நிலைமை என்னவென்று தெரியவில்லை ' என்று நீதிபதியிடம் முறையிட ..
உடனே காவலர்களிடம் , ஏன் கைது பற்றிய விபரங்களை அவர்களிடம் சொல்லவில்லை ? என்றும் பெண்கள் கைது செய்யப்பட்டார்களா என்றும் கேட்க திகைத்து போனார்கள் காவலர்கள் ; ஆனாலும் மக்கள் கோவை மத்திய சிறைக்கு 15 நாட்கள் அனுப்பப்பட்டார்கள் .
இப்படி எழுந்த பேரவை சார்ந்த மக்கள் எழுச்சியால் முருகேசனை அடித்த கவுண்டர்கள் மீது வழக்கு பதிவாகியது. அதனால் நடவடிக்கையும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில்...அந்த வழக்கை திரும்ப பெற வேண்டுமென்று கவுண்டர்கள் கூறினார்கள் .
முருகேசன் மறுத்தார் !
தூது அனுப்பினார்கள் கவுண்டர்கள் !
முருகேசன் மறுத்தார் !
பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி வழக்கை திரும்ப பெறச்சொன்னார்கள்
முருகேசன் மறுத்தார் !
மிரட்டத் தொடங்கினார்கள்
அப்போது முருகேசன் அஞ்சவில்லை ; மறுத்தார் !
அதன் விளைவுகள் ..
" கேவலம் சக்கிலியப் பயலுக கவுண்டர்களை கோட்டுக்கு இழுத்தடிப்பதா ? என்ன திமிர் " என்றபடி 1999 ம் ஆண்டு நவம்பர் திங்கள் 16ம் தேதி மாலையில் முருகேசனை அடித்தார்கள் ... அடித்தார்கள் அந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாறாங்கல்லை கொண்டு தான் முருகேசனை அடித்து கொன்றார்கள் ,அதே இடத்தில முருகேசன் பிணமானார்
அன்று நள்ளிரவு 17ம் தேதி முருகேசனின் மரணம் அதிகாரப் பூர்வமாக திருப்பூர் மருத்துவமனை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. கொண்டவனை இழந்து விதவையானர் முருகேசனின் மனைவி, எட்டு மாத கைக்குழந்தை தந்தையை இழந்தான் .
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டிய மகனை - 28 வாலிப வயது மகனை இழந்தார்கள் , இந்த பார்வையற்ற பெற்றோர்கள் !
பத்து மாதம் முருகேசனை கருவிலே சுமந்த தாய் , இன்று ரத்த வெள்ளத்தில் கட்டி கதறி சுமந்தததால் , மகனின் சிவப்பு ரத்தத்தால் ஈரமான சேலையை தோலில் சும்மாக்கும் அப்பாவி தாய் இவர் .
" ஐயோ போய்ட்டானே ..! ஊருக்கு நல்லது செய்யுறேன் , சாதிக்கு நல்லது செய்யுறேனு சொல்லி சொல்லி ..இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போய்ட்டானே ! இனி நாங்க என்ன பண்ணுவோம் ? இப்படி கொன்னுப்புட்டாங்களே என் மவன " இப்படி இந்த பெரியவர்களின் கதறலை பார்த்து அங்கிருந்தவர்களை அழ வைத்துவிட்டது !
ஆனால் கொடுமை என்ன தெரியுமா ?
17ம் தேதி இறந்ததாக அறிவித்த பின்னர் .. காவல்துறை ஏற்பாட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் முருகேசனின் உறவினர்களிடமோ , நண்பர்களிடமோ , அருந்ததியர் அமைப்புகளிடமோ அவரது உடலை கொடுக்காமல் , 17ம் தேதி அதிகாலையில் செகுடந்தாளி கொண்டுவரப்பட்ட முருகேசனின் உடலை , அவர்களே அடக்கம் செய்துவிட்டார்கள் ! உறவினர்களுக்கு கூட சொல்லி அனுப்ப முடியாத துர்பாக்கிய நிலையில் !
இதில் இன்னொரு கொடுமை
கொலை செய்யப்பட்ட முருகேசனின் உடல் இந்த ஊர் சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை - மாறாக
சாதிவெறியின் உச்சமாக சாதித்திமிரின் ஆதிக்கமாக
தீண்டாமை தலைவிரித்தாடும் சாதிவெறியர்களால் தீண்டாமை அடையாளத்தை காட்டும் வகையில் ஊருக்கு ஒதுக்கு புறமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் , ஊர் சுடுகாட்டுக்கு 2 கிலோ மீட்டரை ஒதுக்குபுறமான கரடு முரடான இடத்தில அனாதையாக அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
அருந்ததியர்கள் பிணம் கூட அனாதையாக இருக்க வேண்டும் என தீண்டாமைக்கு இது தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும் ?
தினவெடுத்த சாதித்திமிர் இன்னும் கிராமங்களில் ஒழியவில்லை என்பதற்கு செகுடந்தாளி கிராமத்தில் சேரி மக்களின் இந்த தனிச்சுடுகாடே " சாட்சி
அதை தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை , அருந்ததிய மக்கள் , பிற அருந்ததிய அமைப்புகளின் ஆக்ரோஷமான எழுச்சியினால்
முருகேசனை கொலை செய்த கவுண்டர்களான மாரப்பன் , பிரகாஷ் என்ற இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ,!
ஆனால் மேல் முறையீட்டில் அவர்களை வெளியே விட்டுவிட்டது
இந்த சாதி வெறியர்கள் கோவை மத்திய சிறையில் இருக்கும் போது கோவை ஒண்டிப்புதூரில் இலவச வெட்டி சேலை வழங்குவதில் நடந்த ஊழலை கண்டித்து போராட்டம் நடத்திய பேரவையின் மாநகரச்செயலாளர் தென்னரசு கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்ட போது மாரப்பனையும் , பிரகாஷையும் சந்தித்து , தான் யார் என்று அடையாளம் காட்டாமல் தோழர் தென்னரசு பேசும் போது அந்த சாதிவெறியர்கள் , அதே சாதித்திமிர் அடங்காமல்
" அந்த சக்கிலி நாய்களை இப்படி விட்டுவிட்டால் என்னாகும் ? விடமாட்டோம் ! நாங்க விடுதலை ஆனப்பறம் பார்த்துக்குறோம் " - என்று கருவியிருக்கிறார்கள்
இன்று அந்த கொலைகாரர்கள் சுந்தந்திர பறவைகள் ;
தர்மம் சொர்க்க லோகத்திற்கு போய்விட்டது !
அருந்ததியனாய் பிறந்த ஒரே காரணத்தால் , 'கீழ்சாதி" என்று முத்திரை குத்தப்பட்ட முருகேசன் தீண்டாமை "- நகரத்தில் மண்ணில் புதைந்து கொண்டு அருந்ததியர்கள் வீரவணக்கத்தை ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக ஏற்று கொண்டு அமைதியாக உறங்குகிறான் !
மனிதத்தை நேசிக்கும் மனித நேயங்களே !
இனம் மொழி சாதிகளுக்கு அப்பால் ; உலகம் தழுவிய மனித நேயக் குரல் , ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் .. இந்த நேரத்தில்.. இங்கே
சாதி !
சாதியைக் காப்பாற்ற மதம் !
மதத்தை காப்பற்ற கடவுள் !
கடவுளை காப்பாற்ற :
இந்துத்துவா என்ற கூடாரம்
மீண்டும் அந்த கூடாரத்தில்
சாதிவெறி ! சாதிக்கொலைகள் !
இதுவா தர்மம் ?.. இதுவா நீதி ? இதுவா மனித நேயம் ?
தீண்டாமைக்கு எதிராக
சாதி ஆதிக்கத்திற்கு எதிராக
சாதி ஒழிப்பிற்கு எதிராக
தன்னை கொடுத்து
தன் உடலைக் கொடுத்து
தன் உயிரையே கொடுத்த
சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் ஒருவனல்ல ; இன்னும் பல முருகேசன்கள் உருவாக போகிறார்கள், !
நாளை விடுதலைக்காக
இன்று முருகேசன்
நாளை ??
அது நாமாக கூட இருக்கலாம் !
கரம் உயர்த்துங்கள் ! ஒன்று சேருங்கள் ! நெஞ்சை நிமிர்த்துங்கள் ! வாருங்கள் முருகேசனின் கல்லறைக்கு !
வீரவணக்கம் செலுத்த அல்ல
அவனுடைய இரத்த துளிகளுக்கு முன்னாள் உறுதிமொழி ஏற்போம் !
சாதியத்தின் தலையை கிள்ளி எறியும் வரை
சரித்திரத்தில் நாங்கள் ஓயமாட்டோம் !
மீதியை இனி களத்தில் பாப்போம்
மேற்கு நிலத்தில் சிவப்பை சேர்ப்போம் .
ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் எழில் இளங்கோவன் தொகுத்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் வெளியிட்ட "மாவீரன் செகுடந்தாளி முருகேசன்" புத்தகத்திலிருந்து .


---

No comments:

Post a comment